ரேணுகாசாமி கொலை வழக்கு: நடிகை பவித்ரா கவுடாவின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி

ரேணுகாசாமி கொலை வழக்கு

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடா தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இவர்களுக்கு முன்பே வழங்கப்பட்ட ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இருவரும் மீண்டும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பவித்ரா கவுடா தரப்பில் பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. தனது மகள் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருவதாகவும், பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் மகளுடன் இருந்து உதவுவதற்காக 25 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முன் நடைபெற்றது. பவித்ரா கவுடா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரரின் மகள் முக்கியமான பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ளார். இந்த நேரத்தில் தாயின் ஆதரவு குழந்தைக்கு மிகவும் அவசியம். எனவே 25 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ரேணுகாசாமி கொலை வழக்கு தற்போது விசாரணை நிலையில் உள்ளதாகவும், சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த கட்டத்தில் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும், எனவே பவித்ரா கவுடாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் அரசு தரப்பு வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பவித்ரா கவுடாவின் இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், “மகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவது போன்ற காரணங்களை முன்வைத்து, கொலை வழக்கில் ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

இதன் மூலம், ஜாமீன் பெற முயன்ற பவித்ரா கவுடாவுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. நீதிமன்ற உத்தரவால் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

© 2026 Aha FM News | All rights reserved | Made With By Infox Cloud