தமிழ்நாடு அரசு அறிவித்த 2016 முதல் 2022 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர்களுக்கு வழங்கினார்.
இந்த விழாவில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 10 விருதுகளைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சிறந்த இயக்குநர், சிறந்த குணச்சித்திர நடிகர் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் அவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு விருதுக்கும் பார்த்திபன் மேடைக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்ததை கவனித்த நடிகை சாய் பல்லவி, “ஏன் அந்த ஸ்டேஜ்லயே ஒரு சேர் போட்டு உட்கார்ந்துகிட்டு எல்லா விருதுகளையும் வாங்கிட்டு வந்திருக்க வேண்டியது தானே?” என்று நகைச்சுவையாக கேட்டுள்ளார். இந்த கமெண்ட் நிகழ்ச்சியில் இருந்தவர்களை சிரிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை பார்த்திபன் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், தனக்கே உரிய பாணியில் பகிர்ந்துள்ளார். அதில், தமிழக அரசின் பத்து விருதுகளை ஒன்றன் பின் ஒன்றாக மேடை ஏறி, இறங்கி வாங்கிய தருணங்களை விவரித்துள்ள அவர், “இத்தலைமுறையின் மிகச் சிறந்த நடிகையர்களில் ஒருவரானவர் அடித்த பெஸ்ட் கமெண்ட் இது” என சாய் பல்லவியின் கருத்தை பாராட்டியுள்ளார்.
மேலும், அந்த வீடியோவை தனது உதவியாளர் சஞ்சனா எடிட்டிங் செய்து இசை சேர்த்து அனுப்பியதாகவும், உதவியாளர்களை உடனுக்குடன் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.





