நடிகை சுரேக்கா வாணியின் மகளும் நடிகையுமான சுப்ரிதா, தனது புதிய திரைப்படமான அமராவதி கி அன்வக்கம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சமீப காலமாக தன்னைச் சுற்றி எழுந்த சர்ச்சைகள் குறித்து மனம் திறந்து பேசினார்.
தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைத்து பரவும் வதந்திகள் குறித்து கருத்து தெரிவித்த சுப்ரிதா, “சிலர் எங்களைப் பற்றி பொய்யான கதைகளை உருவாக்கி, அதன்மூலம் எங்கள் வேதனையை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். அது மிகவும் வலிக்கிறது” என்று வேதனையுடன் கூறினார்.
தொடர்ந்து வரும் எதிர்மறை செய்திகள் மற்றும் விமர்சனங்கள் காரணமாக ஒருகாலத்தில் கடும் மனஅழுத்தத்தை எதிர்கொண்டதாகவும், ஆனால் தற்போது அவற்றை எதிர்கொள்ளும் மனவலிமையை பெற்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தனது தாய் மறுமணம் செய்ய உள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்தி குறித்து விளக்கமளித்த சுப்ரிதா, “அது என்னுடைய ஆசை மட்டுமே. அம்மாவுக்கு அத்தகைய எண்ணம் எதுவும் இல்லை” என்று தெளிவுபடுத்தினார். அடிப்படை உண்மை தெரியாமல் பரவும் செய்திகள் குடும்பத்தினருக்கு தேவையற்ற மனவேதனையை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பேட்டியில், தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை வழங்க வேண்டும் என்றும், நடிகர்களும் மனிதர்களே என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சுப்ரிதா வலியுறுத்தினார்.





