தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்கும் சில நடிகைகளின் பணிமுறை குறித்து மாளவிகா மோகனன் தெரிவித்த கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கதாபாத்திரத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் அவர்கள் போதிய ஈடுபாடு காட்டுவதில்லை என்பது அவரது விமர்சனமாக இருந்தது.

சோகக் காட்சிகளில் 1, 2, 3, 4 என மனதுக்குள் எண்ணிக்கொண்டும், கோபக் காட்சிகளில் ஏ, பி, சி, டி போன்றவற்றைச் சொல்லிக்கொண்டும் முகபாவனைகளை உருவாக்குவதாக அவர் கூறினார். உதட்டசைவை மட்டும் கவனித்துவிட்டு மீதியை டப்பிங்கில் சரிசெய்துகொள்ளும் போக்கும் இருப்பதாகத் தெரிவித்தார். சிலர் ஒரு படத்தில் மட்டுமின்றித் தொடர்ந்து இதையே பின்பற்றுவதாக அவர் குறிப்பிட்டதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.

ஒளிப்பதிவாளர் மோகனின் மகளான மாளவிகா, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்தவர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினிகாந்தின் ‘பேட்ட’ மூலம் தமிழில் அறிமுகமாகி, விஜய்யுடன் ‘மாஸ்டர்’, தனுஷுடன் ‘மாறன்’, பா.இரஞ்சித்தின் ‘தங்கலான்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.