தான் தயாரித்த ‘பூக்கி’ திரைப்படத்தைத் திரையரங்கில் பார்க்குமாறு விஜய் ஆண்டனி ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். வெளியீட்டுக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், புதிய திறமைகளைக் கொண்டு உருவாக்கிய படத்தைத் தவறவிட்டுவிட்டோம் என்று பின்னர் வருந்த வேண்டாம் என்ற கருத்தைத் தெரிவித்தார்.
இசையமைப்பாளராக அறிமுகமாகி பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனச் செயல்படும் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் இதில் நாயகனாக நடித்துள்ளார். அஜய் முன்பு சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
கணேஷ் சந்திரா இயக்கிய படத்தின் நாயகி தனுஷா. பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோரும் நடிகர் குழுவில் உள்ளனர்.
பிப்ரவரி 13 அன்று வெளியான படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. வெளியீட்டிலிருந்து 2 நாட்களுக்குப் பிறகு பகிர்ந்த தனது கருத்தில், படத்தைப் பார்த்தவர்களிடம் கேட்டறிந்தும் ரசிகர்கள் அதை அனுபவிக்கலாம் என விஜய் ஆண்டனி பரிந்துரைத்தார்.







